டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2020 11:27 PM GMT (Updated: 30 Nov 2020 11:27 PM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் 45 பேர் மீது வழக்கு.

பெரம்பலூர்,

மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்க போராட்ட குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மசோதாவை கைவிட வேண்டும். பொது வினியோக திட்டத்தை கைவிடக் கூடாது. விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வை சீர்குலைக்கும் மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் வீர.செங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் காமராசு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேரகன், திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜகான், இந்திய தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஒரு பெண் உள்பட 45 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story