விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றாமல் அதிகாரிகள் அலட்சியம்; மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி


மின்வாரிய அலுவலகத்திற்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் ஊழியர்.
x
மின்வாரிய அலுவலகத்திற்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் ஊழியர்.
தினத்தந்தி 1 Dec 2020 5:37 AM IST (Updated: 1 Dec 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

நிவர் புயலால் விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மழைநீர் தேங்கியது
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள அலுவலகத்தில் விழுப்புரம் நகரத்தை சுற்றியுள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். அதுமட்டுமின்றி மின்தடை புகார் தெரிவிக்கவும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கவும் மின்நுகர்வோர்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 25-ந் தேதி நள்ளிரவு விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. அந்த வகையில் விழுப்புரம் நகரில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகம் (நகரம்-2) பிரிவு வளாகம் மற்றும் அலுவலகத்திற்குள்ளும் மழைநீர் தேங்கியது.

பணிகள் பாதிப்பு
இவ்வாறு தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.

இதனால் உதவி மின் பொறியாளர் அலுவலக நகரம்-2 பிரிவில் மின் கட்டண வசூல் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அதுபோல் மின் தடை புகார் குறித்து தகவல் தெரிவிக்க முடியாமலும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாமலும் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பக்கத்தில் உள்ள நகரம்-1 பிரிவு அலுவலகத்திற்கு சென்று மின் கட்டண வசூல் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு ஒரே இடமான மின்வாரிய நகரம்-1, 2 பிரிவு அலுவலகத்திலேயே நகரில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மின் கட்டண வசூல் பணி நடந்ததால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நின்றனர்.

கொரோனா தொற்று
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றாதது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அவசர, அவசரமாக செயல்பட்டு நேற்று தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

Next Story