போலீசுக்கு போன் செய்து தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி
ஜல்னாவில் போலீசுக்கு போன் செய்து 13 வயது சிறுமி ஒருவள் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாள்.
ஜல்னா,
ஜல்னா மாவட்டம் ஜாப்ராபாத் தாலுகா தம்பூர்ணி கிராமத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது 13 வயது மகளை 28 வயதுடையவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.
அந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்தாள். தனது பெற்றோரின் முடிவால் வேதனை அடைந்த சிறுமி, அவர்களுக்கு தெரியாமல் நைசாக போலீசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தாள். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, அவர்களை எச்சரித்து சென்றனர்.
சில நாட்கள் கழித்து அந்த சிறுமியிடம் இருந்து போலீசுக்கு மீண்டும் போன் வந்தது. அப்போது கடந்த 27-ந் தேதி தனக்கு ரகசிய திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தாள். இதையடுத்து குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். அதற்கு பணிந்து சிறுமிக்கு 18 வயது வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று பெற்றோர் வாக்குறுதி அளித்தனர்.
மேலும் இரு முறை போலீசுக்கு போன் செய்து தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமியை போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story