ஆதனக்கோட்டையில் சுண்ணாம்பு விற்பனை மந்தமானதால் தொழிலாளர்கள் பாதிப்பு


ஆதனக்கோட்டையில் சுண்ணாம்பு விற்பனை மந்தமானதால் தொழிலாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2020 5:50 AM IST (Updated: 1 Dec 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

ஆதனக்கோட்டையில், சுண்ணாம்பு விற்பனை மந்தமானதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதனக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் முந்திரி தொழிலுக்கு அடுத்தபடியாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மழை, புயல் காரணமாகவும், வீடுகள் கட்டும் போது நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாலும் இந்த பகுதியில் உற்பத்தியு செய்யப்படும் சுண்ணாம்பு விற்பனை மந்தமாக உள்ளது. தயாரிக்கப்பட்ட சுண்ணாம்பு விற்பனையாகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கிக் கிடக்கிறது. இதனால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் கணேஷ் என்பவர் கூறுகையில், சுண்ணாம்பு தூள் தயாரிப்பதற்கு மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் அரியலூரில் இருந்து ஒரு டிப்பர் லாரி ரூ.11 ஆயிரத்திற்கு வாங்கி வரப்படுகிறது. அந்த சுண்ணாம்பு கற்களை சிறிய கற்களாக உடைத்து அதனை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து விறகினை அடுக்கி எரியூட்டப்படும். நன்கு எரிந்த பின்னர், அந்த சுண்ணாம்பு தூள்களை சல்லடையால் சலித்து தனியாக பிரித்து 20 கிலோ அளவிற்கு சாக்கு மூட்டைகளில் கட்டி அடுக்கி வைப்போம்.

விற்பனை மந்தம்

ஒரு தடவை கால்வாய் எரியூட்ட ரூ. 6ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விறகுக்கு செலவாகிறது. இந்த தொழிலில் 20-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு ரூ.500-ம், பெண்களுக்கு ரூ.400-ம் கூலியாக வழங்கப்படுகிறது. ஒருதடவை கால்வாயிலிருந்து எரியூட்டப்பட்ட சுண்ணாம்பு தூள் 300 லிருந்து 350 மூட்டை வரை கிடைக்கும். அந்த சுண்ணாம்பை சிமெண்டு சாக்குகளில் கட்டி மூட்டை ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரனூர், அண்டக்குளம், பெருங்களூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வீடு கட்டுவோர் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு தடவை கால்வாய் போட்டு சுண்ணாம்பு விற்றால் ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும்.

தற்போது சுண்ணாம்புக்கு பதிலாக கூலிங் டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுவதால் சுண்ணாம்பு விற்பனை மந்தமாக உள்ளது. மாதத்திற்கு இரண்டு முறை கூட சுண்ணாம்பு கால்வாய் போட முடியவில்லை. இதனால், இந்த தொழில் நலிவடைந்து வருகிறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Next Story