புதுவை நகரம், கிராமப்புறங்களில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள் புழுதி பறப்பதால் - வாகன ஓட்டிகள் அவதி
புறங்களில் தொடர் மழையால் குண்டும், குழியுமாக சாலைகள் மாறியுள்ளன. இதில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
புதுச்சேரி,
வடகிழக்கு பருவமழையால் புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் புதுவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் புதுச்சேரி - கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மரப்பாலம் வரை, காராமணிக்குப்பத்தில் இருந்து மரப்பாலம் வரை, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை உள்பட நகர் முழுவதும் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
இந்த சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் சென்று வருவதால் சிறிய ஜல்லி கற்கள் பெயர்ந்து புழுதி பறக்கிறது. சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளை நகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையாலும் சாலைகள் மேலும் சேதமடைந்து பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன. ஜல்லி கற்கள் மீது வாகனங்கள் செல்வதால் அவை நொறுங்கி புழுதி காற்றாக பறக்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முன்னாள் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பல இடங்களில் புழுதி கிளம்புகிறது.
இது வாகன ஓட்டிகளின் கண்ணில் படுவதாலும், குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் செல்லும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது. இதே நிலைதான் கிராமப்புறங்களிலும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.
புதுவையில் தற்போது சாலைகள் அமைக்கும் போது சில இடங்களில் கருப்பு மண் (கிரஷர் பொடி) வீசுகின்றனர். மழை காலங்களில் அந்த சாலைகள் சேதம் அடையும் போது அந்த பகுதி முழுவதும் புழுதி பறக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் புதிய சாலைகள் அமைக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூரில் இருந்து மாஞ்சாலை செல்லும் சாலையில் சித்தேரி வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு 2 இடங்களில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை செய்யும் வகையில் பள்ளத்தின் அருகே பேரிகார்டு வைத்து, அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.
இது குறித்து பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு, பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story