திரு-பட்டினத்தில் இடிந்த கொட்டகையில் உடலை தகனம் செய்யும் அவலம்
திரு-பட்டினத்தில் இடிந்து விழுந்த தகன மேடையில் உடலை அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட போலகம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள ஒரே தகனமேடையை இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த தகனமேடை கொட்டகை சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இதை சரிசெய்ய போலகம் பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து, தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தகன மேடை கொட்டகையின் சில பகுதிகள் இடிந்து ஆபத்தான நிலையில் தொங்குகிறது. அது எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அபாயகரமான நிலையில் இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தகன மேடையை முழுமையாக சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story