திருச்சியில் உள்ள வங்கியில் காசாளரிடம் ரூ.74 ஆயிரம் திருடிய பெண் கைது


திருச்சியில் உள்ள வங்கியில் காசாளரிடம் ரூ.74 ஆயிரம் திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 1 Dec 2020 1:41 AM GMT (Updated: 1 Dec 2020 1:41 AM GMT)

திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் காசாளரிடம் ரூ.74 ஆயிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகர்,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 10-ந் தேதி அன்று வங்கியின் பெண் காசாளர் அன்றைய தினம் பொதுமக்கள் செலுத்திய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார். அந்த பெண் சென்ற சிறிது நேரத்தில் வங்கி காசாளர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.74 ஆயிரம் குறைவாக இருந்ததை கண்டு பதறினார். உடனே இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பெண் கைது

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் காசாளர் அருகே நின்று பேசிய பெண் மேஜை டிராயரில் இருந்த ரூ.74 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர், சுந்தரம்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ராஜ் மோகன் என்பவரின் மனைவி செல்வி (வயது 43) என்பதும், வங்கியில் ரூ.74 ஆயிரத்தை திருடியது இவர் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து செல்வியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.74 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story