ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு தூத்தூரில் 5 கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி


ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு தூத்தூரில் 5 கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி
x
தினத்தந்தி 1 Dec 2020 9:27 AM IST (Updated: 1 Dec 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்தூரில் ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு 5 கடற்கரை கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

கொல்லங்கோடு,

தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி ஒகி புயல் தாக்கியது. இந்த புயல் குமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பயங்கர காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலில் மூழ்கினர்.

தூத்தூர் மண்டலத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 137 மீனவர்கள் பலியானார்கள். பலர் கடலில் மாயமானார்கள். ஆறாதா வடுவை ஏற்படுத்திய இந்த ஒகி புயல் தாக்கிய 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் குளச்சலில் அனுசரிக்கப்பட்டது. அப்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் புயலில் இறந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்தூர்

இந்தநிலையில், நேற்று தூத்தூர் கடற்கரையில் ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக நேற்று மாலை 5 மணியளவில் தூத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை ஆகிய 5 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஊர்வலமாக தூத்தூர் கடற்கரைக்கு வந்தனர்.

அங்கு புயலில் இறந்த மற்றும் மாயமான மீனவர்களின் உருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படங்களின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு கடற் கரையில் நீண்ட நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

நினைவு திருப்பலி

அப்போது இறந்த மீனவர்களின் உறவினர்கள் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். முன்னதாக மீனவ கிராமங்களில் இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story