அந்தியூரில் பரபரப்பு; விவசாயி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


அந்தியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்; விவசாயி மாதன்
x
அந்தியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்; விவசாயி மாதன்
தினத்தந்தி 2 Dec 2020 1:15 AM IST (Updated: 1 Dec 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் விவசாயி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலையில் கொங்காடை பகுதியை சேர்ந்தவர் மாதன் (வயது 50). விவசாயி. இவர் அந்தியூர் எண்ணமங்கலத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவருக்கு சொந்தமான தோட்டம் கொங்காடையில் உள்ளது.இந்த தோட்டத்துக்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 28-ந் தேதி கொங்காடையில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்று உள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அடையாளம் தெரியாத பிணம்
இந்தநிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஒரு புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘இறந்து கிடந்த நபர் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தை சேர்ந்த மாதன்,’ என தெரியவந்தது. மேலும் அவருடைய உடலை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.

சாலை மறியல்
இந்த நிலையில் மாதன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள பர்கூர் ரோட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு
அப்போது மாதனின் உறவினர்கள் கூறுகையில், ‘கொங்காடை பகுதியை சேர்ந்த சிலர் மாதனை கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும்,’ என்றனர். 

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ‘ இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த மாதனின் உறவினர்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாலை 6 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story