புயல் பாதிப்பு தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நெல்லை-தூத்துக்குடிக்கு வந்தன - தயார் நிலையில் நிவாரண முகாம்கள்


புயல் பாதிப்பு தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நெல்லை-தூத்துக்குடிக்கு வந்தன - தயார் நிலையில் நிவாரண முகாம்கள்
x
தினத்தந்தி 2 Dec 2020 4:30 AM IST (Updated: 1 Dec 2020 11:39 PM IST)
t-max-icont-min-icon

புயல் பாதிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நேற்று வந்தன. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை,

வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்கும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காகவும், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு சென்னை, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் துணை கமாண்டர் வைத்திலிங்கம் தலைமையில் 60 பேர் வந்துள்ளனர். அவர்கள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டர் வைத்திலிங்கம், கலெக்டர் விஷ்ணுவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து 60 பேரும் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை, தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டர் வைத்திலிங்கம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்திற்கு 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது. நாங்கள் தயார் நிலையில் தற்போது இருக்கிறோம். தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை மீட்பதற்காக படகுகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அந்த மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்களும், மலைப்பகுதிக்கு செல்வதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் எங்களிடம் உள்ளது.

புயல் சென்று விட்டது என்று நினைத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல் முடிந்த பிறகும் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். கூரை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் சின்னத்தால் நெல்லை மாவட்டத்தில் ஏற்படும் மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். மாவட்டத்தில் உள்ள அணைகள், மாஞ்சோலை மலைப்பகுதிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை அறுப்பதற்கான எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 கடலோர கிராமங்களில் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடலோர கிராமங்கள் முழுவதும் கண்காணிப்பில் உள்ளது. மீனவர்களை தங்க வைக்க 7 பல்நோக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 60 பேரும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

நமது மாவட்டத்தைப் பொருத்தவரை மீனவர்கள் யாரும் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு செல்லவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரை மழை, வெள்ள காலங்களில் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. தாமிரபரணி ஆற்றில் அடுத்த 2 நாட்கள் யாரும் குளிக்க வேண்டாம். இதை குழு அமைத்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நெல்லையில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நெல்லை கைலாசபுரம் மதரஸா இஸ்லாமிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர் இளஞ்செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்துபூந்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தற்காலிக நிவாரண முகாமுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களையும் தொடர்பு கொண்டு கரைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 20 பேரும், மாநில பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 40 பேரும் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து பேசினார்கள். அவர்கள் வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story