சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார்: திருச்செந்தூரில் வருகிற 7-ந் தேதி பா.ஜனதா வேல்யாத்திரை நிறைவு - மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி


சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார்: திருச்செந்தூரில் வருகிற 7-ந் தேதி பா.ஜனதா வேல்யாத்திரை நிறைவு - மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2020 3:30 AM IST (Updated: 2 Dec 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் வருகிற 7-ந் தேதி பா.ஜனதா வேல்யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார் என்று மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

தூத்துக்குடி,

திருச்செந்தூரில் பா.ஜனதா வேல்யாத்திரை நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தேசிய குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா சார்பில் கடந்த மாதம் 6-ந் தேதி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரை தொடங்கப்பட்டது. அந்த யாத்திரை டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரில் முடியும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். ஆனால், புயல் காரணமாக வேல்யாத்திரையை வருகிற 7-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொள்கிறார். அதற்கு முன்பாக 5-ந் தேதி அன்று அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை உள்ளிட்ட 4 இடங்களுக்கு சென்று வழிபட உள்ளோம்.

ரஜினிகாந்த் நல்ல ஆன்மிகவாதி. தேசிய சிந்தனை கொண்டவர். அவர் கட்சி தொடங்குவதை ஏற்கனவே வரவேற்று உள்ளோம். தற்போது அவர் விரைவில் முடிவு அறிவிப்பதாக கூறி உள்ளார். அவர் எந்த முடிவு எடுத்து, அறிவித்தாலும் பா.ஜனதா வரவேற்கும்.

விவசாயிகளின் தேவை, சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை அடிப்படையில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. புதிய வேளாண் சட்டத்தால் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தால், பொருட்களின் விலை குறைந்தாலும், ஒப்பந்தம் செய்த விலைக்கே விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல பயன் உள்ளது. டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு பின்னால் அரசியல் கட்சிகள் இருந்து ஊக்குவித்து வருகின்றன. மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. விவசாய சட்டங்களை வைத்து மிகப்பெரிய அளவில் விவசாயிகள் மத்தியில் பிரச்சினையை கிளப்ப முயன்றனர். ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஏனென்றால் பிரதமர் மோடி விவசாயிகளின் தோழனாக, பாதுகாவலனாக, நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்து உள்ளார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

தலித் சமூகத்தில் 5 உட்பிரிவினரை வேளாளர் என்று அறிவிப்பது குறித்து, சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு வரும். இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

இதையடுத்து திருச்செந்தூர்-நெல்லை ரோட்டில் வேல்யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடக்கும் கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள திடலை எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து திருச்செந்தூர் சிவமுருகன் திருமண மஹாலில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வேல்யாத்திரைக்கு பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து பொதுமக்களும் பேராதரவு தந்துள்ளனர். தமிழகத்தில் மற்ற கட்சிகளைவிட பா.ஜனதா வேகமாக வளர்ந்து வருகிறது. திருச்செந்தூரில் யாத்திரை பயணத்தை முடித்ததும் வெற்றிவேலை முருகனுக்கு வழங்குவேன். இந்த யாத்திரை வெற்றி பெறும். இங்கு அத்தனை இருக்கைகளிலும் கட்சியினர் நிறைந்திருப்பதை போல் தமிழக சட்டசபையில் உள்ள இருக்கைகளில் பா.ஜ.க.வினர் அமரும் காலம் விரைவில் வரும்“ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர்கள் நரேந்திரன், நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில வர்த்தகர் அணி தலைவர் ராஜக்கண்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளியாதவ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலாபுஷ்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story