திருவேங்கடத்தில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி - காப்பாற்ற முயன்ற அக்காள் படுகாயம்


திருவேங்கடத்தில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி - காப்பாற்ற முயன்ற அக்காள் படுகாயம்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:15 AM IST (Updated: 2 Dec 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக பலியானார். காப்பாற்ற முயன்ற அவரது அக்காள் படுகாயம் அடைந்தார்.

திருவேங்கடம்,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அங்காளஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 40), கொத்தனார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.

இவரது வீட்டு மாடியில் துணி காயப்போடுவதற்காக இரும்பாலான கொடியை அமைத்து உள்ளார். அந்த கொடியானது மின்சார ஒயரை தொட்டபடி சென்றதாகவும், சமீபத்தில் பெய்த மழையால் அந்த மின்சார ஒயர் பழுதடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராமர் துணி காயப்போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவரது சத்தம் கேட்டு, அவரது அக்காள் அங்கம்மாள் (42) என்பவர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயங்களுடன் அங்கம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story