மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வினியோகம் - கலெக்டர் மெகராஜ் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டோக்கன்கள் வினியோகம்
கொரோனா தொற்று பரவுதலை தவிர்க்கும் வகையில் இந்த மாதம் ரேஷன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே வழங்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட டோக்கனில் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்்கள் (பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய்.) இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களில் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற ஏதுவாகவும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற ஏதுவாகவும், நாள் மற்றும் நேரம் டோக்கனில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
சம்பந்தப்பட்ட குடும்பஅட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க செல்லவேண்டும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும்.
முன்னுரிமை உள்ள குடும்பஅட்டைதாரர்களுக்கு மட்டும் துவரம் பருப்பிற்கு பதில் 5 கிலோ முழுக்கொண்டைக்கடலை விலையின்றியும், அவர்களுக்கான உரிம அளவின்படி இதர அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும். அதேபோன்று முன்னுரிமை இல்லாத குடும்பஅட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கு 1 கிலோ துவரம் பருப்பு மட்டும் விலையின்றியும் (கொண்டைக்கடலைதவிர), இதர அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கு அந்தந்த பகுதி ரேஷன்கடை பணியாளர்கள் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பொது வினியோக திட்ட அத்தியாவசிய பொருட்களை (ரேஷன் பொருட்கள்) வழங்குவார்கள்.
இந்த நடைமுறையின்படி இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், உடன் நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு 9445000232 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story