தொப்பூர் கணவாயில் கவிழ்ந்த டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியது; 2 டிரைவர்கள் காயம்
தொப்பூர் கணவாயில் கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
டேங்கர் லாரி கவிழ்ந்தது
ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு சிமெண்டு ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம் மேட்டூர் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் முதல் வளைவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்து நடந்து சிறிது நேரத்திலேயே பின்னால் சிமெண்டு ஏற்றி வந்த மற்றொரு டேங்கர் லாரி, ஏற்கனவே கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் டிரைவர் ஈஸ்வரன், மற்றொரு லாரி டிரைவரான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார் மோதியது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணி (26), சந்துரு (22), ராஜேந்திரன் (45), மூக்காயி (32) ஆகிய 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதையடுத்து போலீசார் லாரிகள் மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story