திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி சிறுவன் பலி - மாயமான மற்றொரு மாணவனை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் சகதோழியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது, ராட்சத அலையில் சிக்கி கடலில் குளித்த சிறுவன் பலியானான்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் ஜான்ராவர் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் தருண் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜோசப் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் தங்களின் சகதோழியான பூஜா என்ற சிறுமியின் பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஏழு குடிசை கடல் பகுதிக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது தருண் மற்றும் ஜோசப் ஆகிய 2 பேர் மட்டும் அங்குள்ள கடலில் குளித்து விளையாடியுள்ளனர். இதையடுத்து, திடீரென தோன்றிய ராட்சத அலை அவர்கள் 2 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் இருவரும் மாயமாகியதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சியில் கூச்சலிடவே, அருகில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடலில் தத்தளித்த சிறுவர்களை தேடி கண்டுபிடித்து மீட்க முடியவில்லை. இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திருவொற்றியூர் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மீரான் உள்ளிட்ட போலீசார் மீனவர்களுடன் படகில் சென்று மாயமான சிறுவர்களை துரிதமாக தேடினர்.
அப்போது கடலுக்குள் மிதந்து வந்த ஜோசப்பை மட்டும் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் கடலுக்குள் மாயமான தருணை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story