அதிகாரிகள் முன்னிலையில் எய்ட்ஸ் நோயாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி


அதிகாரிகள் முன்னிலையில் எய்ட்ஸ் நோயாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Dec 2020 3:15 AM IST (Updated: 2 Dec 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் முன்னிலை யில் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் நேற்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

அப்போது அனைவரும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை அனைவரும் கண்டுகளித்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

பின்னர் அனைவருடன் அமர்ந்து அவர் சமபந்தி உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தையல் கடை நடத்திவரும் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்த 49 வயதான நபர் திடீரென தான் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தன்னுடைய உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதை பார்த்த அங்கு இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை மேற்கொண்டு எதுவும் செய்து கொள்ள முடியாத அளவுக்கு அவரை தடுத்தனர்.

உடனடியாக அவரது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் பறித்து கொண்டனர். பின்னர் அவரை அங்கு உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பட்டாபிராமில் வசித்து வருகிறேன். கடந்த 2013-ம் ஆண்டு முதல் எங்கள் பகுதியில் வசிக்கும் 4 பேர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்கள் என்னை இங்கு வசிக்கக்கூடாது, வீட்டை விட்டு உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து என்னை தாக்குகின்றனர்.

தன்னை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டாபிராம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நான் இங்கு நடைபெற்ற கூட்டத்தில் என் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், குடும்ப நல மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராணி, குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், மாவட்ட திட்ட மேலாளர் கவுரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story