விளையாட்டு வினையானது தொண்டையில் பலூன் சிக்கி சிறுவன் பலி - அந்தேரியில் பரிதாபம்


விளையாட்டு வினையானது தொண்டையில் பலூன் சிக்கி சிறுவன் பலி - அந்தேரியில் பரிதாபம்
x
தினத்தந்தி 1 Dec 2020 11:00 PM GMT (Updated: 2 Dec 2020 12:12 AM GMT)

அந்தேரியில் பலூன் ஊதி விளையாடிய சிறுவனின் தொண்டையில், பலூன் சிக்கியதால் மூச்சுத்திணறி பலியானான்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சூரஜ் நாக். வெற்றிலை வியாபாரி. இவரது மகன் தேவ்ராஜ் (வயது 4½). நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த தேவ்ராஜ் தனது சகோதரியுடன் பலூன் ஊதி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தேவ்ராஜ் வாயில் வைத்திருந்த பலூன் உள்ளே இழுத்து கொண்டதால் அந்த பலூன் அவனது தொண்டையில் சிக்கியது. இதனால் தேவ்ராஜூக்கு இருமல் ஏற்பட்டது. இதனால் பதறிபோன சூரஜ் நாக் தனது மகனின் தொண்டையில் சிக்கிய பலூனை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதனால் தேவ்ராஜ்விற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அவனை அந்தேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முடியாமல் போனதால் நானாவதி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர். இதன்பேரில் அவர்கள் தேவ்ராஜை மீட்டு நானாவதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே தேவ்ராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story