மங்களூரு அருகே சம்பவம்: காற்றின் சீற்றத்தால் மீன் பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிய விசைப்படகு - 2 பேர் பலி; 4 பேரின் கதி என்ன?


மங்களூரு அருகே சம்பவம்: காற்றின் சீற்றத்தால் மீன் பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிய விசைப்படகு - 2 பேர் பலி; 4 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 2 Dec 2020 4:30 AM IST (Updated: 2 Dec 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே, அரபிக்கடலில் காற்றின் சீற்றத்தால் மீன் பாரம் தாங்காமல் விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதில் அந்த படகில் இருந்த 16 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 2 பேர் பலியானார்கள். 4 மீனவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் போலார் பகுதியைச் சேர்ந்த ஒரு மீன்பிடி தொழில் அதிபருக்கு சொந்தமான ‘ஸ்ரீரக்சா’ என்ற பெயர் கொண்ட விசைப்படகில் கடந்த 30-ந் தேதி அன்று அதிகாலையில் 22 மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலுக்கு சென்று மீன்களை பிடித்த அவர்கள் நேற்று காலையில் பந்தர் துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை வந்து சேரவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த மீன்பிடி தொழில் அதிபர் வயர்லஸ் மூலம் மீன்பிடிக்க சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்கள் வயர்லசை எடுத்து பேசவில்லை. இதனால் மேலும் பதற்றம் அடைந்த அவர், இதர படகுகளில் சென்ற மீனவர்களை வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பந்தர் துறைமுகத்தில் இருந்து சில கடல் மைல் தொலைவில் அந்த மீனவர்களின் வலை மட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மீனவர்கள், அந்த விசைப்படகில் வந்த மீனவர்களை தேடினர். அப்போது அங்கிருந்து சில கடல் மைல் தொலைவில் ஒரு சிறிய படகில் 16 மீனவர்கள் இருந்தனர். 6 பேரை காணவில்லை. இதையடுத்து அந்த 16 மீனவர்களையும் மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது நடுக்கடலுக்கு சென்று அவர்கள் அதிக அளவில் மீன்களை பிடித்துள்ளனர். பின்னர் அவற்றை படகில் ஏற்றிக் கொண்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் விசைப்படகை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக திரும்பியது. மேலும் அதிக அளவில் மீன் பாரம் ஏற்றப்பட்டு இருந்ததாலும், காற்றின் சீற்றத்தாலும் விசைப்படகு கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து கடலில் மூழ்க தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், படகில் இருந்து வலையையும், மீன்களையும் கடலில் கொட்டியுள்ளனர். அப்போதும் கட்டுப்பாட்டுக்கு வராத படகு பாதியளவுக்கு மேல் மூழ்கிவிட்டது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த சிறிய படகில் ஏறி தப்பி உள்ளனர்.

ஆனால் மங்களூருவைச் சேர்ந்த மீனவர்களான சியாவுல்லா(வயது 32), அன்சார்(31), உசேன் நார்(25), சிந்தன்(21) மற்றும் பாண்டுரங்க சுவர்ணா(58) மற்றும் பிரீத்தம் ஆகிய 6 பேர் கடைசி வரையில் படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது முடியாமல்போக அவர்கள் கடலில் குதித்து நீச்சல் அடித்து தப்பிக்க முயன்றனர்.

மற்ற 16 மீனவர்களும் சிறிய படகில் ஏறி கரையை நோக்கி தப்பி வந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கடலில் குதித்த 6 மீனவர்களையும், கடலில் மூழ்கிய படகையும் தேடும் பணியில் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் ஈடுபட்டனர்.

அதில் பாண்டுரங்க சுவர்ணா, பிரீத்தம் ஆகிய 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். மற்ற 4 பேரையும் காணவில்லை. அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று மீனவர்கள் கூறினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கடலில் அந்த விசைப்படகு முற்றிலும் மூழ்கி விட்டது தெரியவந்துள்ளது. அந்த விசைப்படகின் ஒரு பகுதி கூட கடலின் மேல் பகுதியில் தெரியவில்லை என்று மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த மங்களூரு மற்றும் பந்தர் மீன்பிடி துறைமுக உயர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு கப்பல் மூலம் கடலுக்கு சென்றனர். மேலும் கடலோர காவல் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மூழ்கிய விசைப்படகையும், மாயமான 4 மீனவர்களையும் அவர்கள் தொடர்ந்து தேடிவருகிறார்கள். அந்த 4 மீனவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் நேற்று மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story