ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி; முட்டல் ஏரியில் படகு சவாரி தொடக்கம்


ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதையும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்வதையும் படத்தில்காணலாம
x
ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதையும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்வதையும் படத்தில்காணலாம
தினத்தந்தி 2 Dec 2020 6:04 AM IST (Updated: 2 Dec 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே முட்டல் ஏரி, ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் படகு சவாரி செய்தும், நீர்வீழ்ச்சியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

முட்டல் ஏரி
ஆத்தூர் அருகே முட்டல் ஏரி மற்றும் ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இதனை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். இங்கு படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் கடந்த 8 மாதங்களாக ஆனைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி மற்றும் அங்குள்ள பூங்கா போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன.

அனுமதி
தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால் நேற்று முதல் ஆனைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் முட்டல் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினார்கள். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் வனச்சரகர் அன்பழகன் மற்றும் வனத்துறையினர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். 3 பேருக்கு மேல் படகு சவாரி செய்யக்கூடாது. நீர்வீழ்ச்சியில் 5 பேருக்கு மேல் குளிக்கக் கூடாது என அறிவுரைகள் வழங்கினர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வனத்துறை சார்பில் முககவசம் வழங்கப்பட்டது. 8 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், நீர்வீழ்ச்சியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Next Story