தளி கொத்தனூரில், கொய்மலர் சாகுபடி மையத்தை இஸ்ரேல் நாட்டு தூதர் ஆய்வு


அரசு கூட்டு ஒப்பந்த கொய்மலர் சாகுபடி மையத்தை இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனாத்தன் ஜட்கா நேரில் ஆய்வு
x
அரசு கூட்டு ஒப்பந்த கொய்மலர் சாகுபடி மையத்தை இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனாத்தன் ஜட்கா நேரில் ஆய்வு
தினத்தந்தி 2 Dec 2020 6:15 AM IST (Updated: 2 Dec 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

தளி கொத்தனூரில் உள்ள அரசு கூட்டு ஒப்பந்த கொய்மலர் சாகுபடி மையத்தை இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனாத்தன் ஜட்கா நேரில் ஆய்வு செய்தார்.

கொய்மலர் சாகுபடி மையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் தளி கொத்தனூரில் ரூ.8 கோடியே 80 லட்சம் மதிப்பில் இந்திய-இஸ்ரேல் அரசு கூட்டு ஒப்பந்த கொய்மலர் சாகுபடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை இந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனாத்தன் ஜட்கா, துணை தூதர் ஏரியல் சீட்மேன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆகியோர் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அந்த கிராமத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோஜா சாகுபடி செய்துள்ளதை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் இஸ்ரேல் நாட்டு தூதர் ஜோனாத்தன் ஜட்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய தொழில் நுட்பங்கள்
தளி கொய்மலர் மகத்துவ மையம் 6.12.2017-ம் ஆண்டு இந்திய அரசு மற்றும் இஸ்ரேல் அரசுகளின் கூட்டு ஒப்பந்த திட்டமாகும். இந்த திட்டம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொய்மலர் மகத்துவ மையம் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த திட்டம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொய்மலர் சாகுபடியாளர்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.

கொய்மலர்கள் சாகுபடி செய்ய அனைத்து உயர் தொழில்நுட்பங்களையும், செயல்விளக்க மையத்தில் அமைத்து விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை கள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஓர் இடமாக கொய்மலர்் மகத்துவ மையம் அமைந்துள்ளது. இதுவரை 7,455 விவசாயிகள், வங்கி அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உயர்தொழில்நுட்ப முறையில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடவு பணிகள்
தொடர்ந்து கொய்மலர் மகத்துவ மையத்தில் சாகுபடி செய்யப்பட்ட மலர்களை அவர்கள் பார்வையிட்டு பசுமை குடிலில் ஜெட்ரோபா செடிகள் நடவு பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திசு வாழை நாற்றுகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து கொய்மலர் மகத்துவ மையத்தில் நிழல்வலை கூடாரத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பலவித இலை அலங்கார செடிகளை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் இஸ்ரேல் தூதர் பசுமை கூடாரத்தில் கார்னேசன் மலர் செடி நடவு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி, திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆறுமுகம், வினயா ஜெனிபர், சிவசங்கரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story