4-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்


4-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2020 2:24 AM GMT (Updated: 2 Dec 2020 2:24 AM GMT)

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கரூர்,

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் கரூரின் மைய பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமாகும். காமதேனு வழிபட்ட தலம். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். கோவிலில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.

இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, மார்கழி திருவிழா, ஆருத்ரா தரிசனம், கந்தசஷ்டி திருவிழா, பிரதோஷ பூஜைகள், பவுர்ணமி பூஜைகள் விஷேசமாக நடக்கும். கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு வருகிற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள்

பின்னர், கடந்த 29-ந்தேதி கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு கும்ப அலங்காரம் நடைபெற்று மூல ஆலயத்திற்கு கலசம் சென்று கலாகர்ஷணம் செய்து வலமாக வந்து கலசங்களை யாகசாலையில் வைத்து முதல்கால யாகசாலைபூஜை தொடங்கியது. மேலும் மகாபூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று(புதன்கிழமை) காலை ஆச்சாரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு பூஜைகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலைகள் வலமாக வந்து தீபாராதனை நடைபெற்று 2-ம்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகிறது. மாலை 3-ம்கால யாகசாலை பூஜைகள், திரவிய ஹீதி, மகா பூர்ணாஹீதி, உபசார வழிபாடு நடைபெற உள்ளது.

நாளை(வியாழக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜைகளும் மற்றும் சாமி அம்பாளுக்கு ஸ்வர்ண பந்தனமும், விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி அதன்மேல் வெள்ளியினால் தகடு சாற்றப்படுகிறது. மாலை 5-ம்கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

Next Story