உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2020 4:04 AM GMT (Updated: 2 Dec 2020 4:04 AM GMT)

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் நேற்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பா.ம.க.வினர் நேற்று காலை வாகனங்களில் உளுந்தூர்பேட்டை வழியாக புறப்பட்டு சென்றனர். உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார், போராட்டத்துக்கு சென்னை செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது. எனவே நீங்கள் திரும்பிச்செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களை சென்னை செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 500-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சென்னை செல்ல பா.ம.க.வினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story