மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளர் அறையை பூட்டிய ஒன்றியக்குழு தலைவரால் பரபரப்பு


மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளர் அறையை பூட்டிய ஒன்றியக்குழு தலைவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2020 11:00 AM IST (Updated: 2 Dec 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளர் அறையை ஒன்றியக்குழு தலைவர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் 11 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு தேவையான சாலை வசதி, கழிப்பிட வசதி, வீட்டு வசதி போன்ற பல்வேறு பணிகள் குறித்த திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளர் அறை அமைந்துள்ளது. இந்த நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் ஒன்றியக்குழு தலைவர் காவியா மற்றும் துணைத் தலைவர் ஈஸ்வரசாமி ஆகியோர் பொறியாளர் அறையின் கதவுகளை இழுத்து மூடினார்கள். ஒன்றியக்குழுத்தலைவர் தனது கையில் வைத்திருந்த பூட்டை எடுத்து பொறியாளர் அறையை பூட்டி, சாவியை எடுத்துக்கொண்டார். அப்போது ஒன்றிய குழுத் துணைத்தலைவர் ஈஸ்வரசாமி உடனிருந்தார்.

ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவம் குறித்து ஒன்றிய அலுவலர்கள் அனைவரும் ஒன்றிய குழு தலைவரிடம், பொறியாளர் அறையை திறந்தால் மட்டுமே, பணிக்கு செல்வோம் எனக்கூறினார். ஆனால் அதனை ஒன்றியக்குழு தலைவர் ஏற்கமறுத்துவிட்டார். பின்னர் ஆத்திரமடைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சுமார் 45-க்கும் மேற்பட்டோர், பணியை புறக்கணித்து, வெளிநடப்பு செய்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது. மேலும் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, மாவட்ட நிர்வாகம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆகியோரிடம் விசாரணை செய்து அறிக்கை தயார் செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக எடுத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மடத்துக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாதம்பிரியா, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story