பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்


பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:15 PM IST (Updated: 2 Dec 2020 3:06 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

ராமேசுவரம்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடந்து அங்கிருந்து வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இன்று முதல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று காலை பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த புயலானது இலங்கை அருகே கரையை கடந்தாலும் தமிழக கடற்கரையை நோக்கி நகரலாம் என்பதால் பலத்த சூறாவளி காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும். எனவே, படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகுகளை பாம்பன் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க மாவட்ட கலெக்டர், மீனவர்களிடம் அறிவுறுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து மீன்பிடி படகுகள் கடந்து செல்வதற்காக நேற்று காலை 10 மணி அளவில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 200-க்கும் அதிகமான விசைப்படகுகள் வடக்கு கடல் பகுதியில் இருந்து தூக்குப்பாலத்தை கடந்து பாம்பன் குந்துகால் அருகே உள்ள தென் கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று 2-வது நாளாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. பாம்பன் பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் பாறை மீது மோதி பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்தன.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், நாட்டுப்படகுகளும் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story