வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 10:30 AM GMT (Updated: 2 Dec 2020 10:25 AM GMT)

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொண்டி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகரை நோக்கி டெல்லி சலோ எனும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் சட்ட மசோதாக்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ராமநாதபுரத்தில் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்ச்சிக்கு தாலுகா குழு நிர்வாகி பூமிநாதன், தாலுகா செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்டு நிர்வாகி கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவாடானையில் வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதுகுளத்தூர் தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வசந்த் சுர்ஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. குழுவின் சார்பில் அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவாஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் அய்யாத்துரை, நகர் குழு கன்வீனர் குமார், மாவட்ட துணை செயலாளர் சுடலைகாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story