மடை சரிந்து விழுந்ததாக கூறி கண்மாயில் நின்று விவசாயிகள் போராட்டம்


மடை சரிந்து விழுந்ததாக கூறி கண்மாயில் நின்று விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 4:30 PM IST (Updated: 2 Dec 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே மடை சரிந்து விழுந்ததாக கூறி கண்மாயில் நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாய் இருப்பது மாரநாடு தான். இது மானாமதுரை அருகே உள்ளது. இந்த கண்மாய் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி வழங்குகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமலும் கண்மாய் தூர்வாராமலும் காணப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.97 லட்சம் செலவில் கண்மாயில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. மடைகள் சீரமைக்கப்பட்டன. தற்போது பெய்த மழையினால் கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மடை சேதமடைந்து விட்டதாக கூறி வெள்ளிகுறிச்சி மாரநாடு, ஆவரங்காடு, தஞ்சாக்கூர், கச்சநத்தம், ஆலடிநத்தம் போன்ற கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் நேற்று காலை மாரநாடு கண்மாய் மடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சரிவர குடிமராமத்து பணிகளை செய்யவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்ய இருப்பதாகவும் கூறினார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த மடையை சரி செய்ய வேண்டும் என அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மாரநாடு குடிமராமத்து பாசன கண்மாய் தலைவர் சுகுமார் கூறும் போது, 60 சதவீத வேலை நடைபெற்று உள்ளது. எந்த வித மடையும் சேதமடையவில்லை. மண் சரிந்துள்ளன. அவற்றை பொதுபணித்துறை அதிகாரிகள் சரி செய்து விடுவார்கள்.இது தேவை இல்லாத பிரச்சினை என்றார்.

திருப்புவனம் பொதுப்பணித்துறை அதிகாரி அமுதாவிடம் கேட்ட போது, மடை சரியாக தான் கட்டி உள்ளோம். 7அடி வரை மணல் உயரத்திற்கு மடை இருப்பதால் மண் சரிவது இயல்பு தான். அதனை சரி செய்வதற்காக கற்களை அகற்றி உள்ளோம். மடைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

Next Story