டி.கல்லுப்பட்டியில் வாலிபர் இறந்த சம்பவத்தில் உறவினர்கள் 3 பேர் கைது


டி.கல்லுப்பட்டியில் வாலிபர் இறந்த சம்பவத்தில் உறவினர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2020 5:00 PM IST (Updated: 2 Dec 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டியில் வாலிபர் இறந்த சம்பவத்தில் அவரது உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரையூர், 

டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அய்யனார் (வயது 29). இவர் கடந்த 29-ந்தேதி பேரையூர் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மதுபாட்டிலை அங்கு வைத்து விட்டு நொறுக்குத்தீனி வாங்குவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மதுபாட்டிலில் இருந்த மது அளவு குறைந்து இருந்தது.

இதனால் அவர் பொதுவாக சத்தம் போட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த அவரது உறவினர்கள் கணேசன் (46), செல்வம் (47), குணசீலன் (33), ஆகியோர் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று வாக்குவாதம் செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றி 3 பேரும் சேர்ந்து அய்யனாரை அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்து அய்யனார் வீட்டுக்கு சென்று தனது தாய் ரதி லட்சுமியிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அய்யனார், ரதி லட்சுமி ஆகியோர் புகார் செய்வதற்காக போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் கணேசன் உள்ளிட்ட 3 பேரை பார்த்ததும் அய்யனார் அவர்களை தாக்கினார். உடன் வந்த அவரது தாய் சண்டையை விலக்கிவிட்டுள்ளார்.

அப்போது அங்கு ரோந்து வந்த போலீசார் அய்யனாரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். ஆனால் அவர் போலீஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து ரதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் அய்யனாரின் உறவினர்கள் கணேசன், செல்வம், குணசீலன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story