புதிய குவாரிகள் தொடங்க தடை: “மத்திய அரசு அறிவிப்பை அந்தந்த மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும்” - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


புதிய குவாரிகள் தொடங்க தடை: “மத்திய அரசு அறிவிப்பை அந்தந்த மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும்” - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 2 Dec 2020 12:15 PM GMT (Updated: 2 Dec 2020 1:40 PM GMT)

“ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது, மத்திய அரசு அறிவிப்பை அந்தந்த மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட (சூழல் உணர்திறன்) வனமண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தின் எல்லையை நிர்ணயிப்பது குறித்து பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு சமயத்தில் கருத்து கேட்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி விளம்பரம் வெளியிடவில்லை.

இந்த மண்டலத்தின் எல்லையை 3 கிலோ மீட்டர் தூரம் என்று நிர்ணயிப்பது தொடர்பாகத்தான் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் வரை என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “இதுதொடர்பான அறிவிப்புகள் வட்டார மொழியில் வெளியிடப்படாததும், பொதுமக்களிடம் சென்று சேராததற்கு காரணம்” என்றார்.

இதையடுத்து, “மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, அந்தந்த மாநில மொழிகளிலும் அறிவிப்பதுடன், அது தொடர்பான விவரங்களையும் வெளியிட வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், “பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்பு நடத்தாமல் குமரி மாவட்ட சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் ஏற்கனவே இருக்கும் குவாரிகளை மூடவும், புதிதாக குவாரிகள் தொடங்கவும் அனுமதிக்கக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story