1,135 தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவாமல் தடுப்பு - அதிகாரிகள் தகவல்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்த 1,135 தாய்மார்களிடம் இருந்து குழந்தைக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையையும் அவர் வழங்கினார்.
எய்ட்ஸ் நோய் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்பட 112 இடங்களில் எச்.ஐ.வி. குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் உள்ளது. இதில் இதுவரை சுமார் 18 லட்சத்து 30 ஆயிரத்து 354 பேர் ரத்த பரிசோதனை செய்துள்ளனர். இதில் 18 ஆயிரத்து 700 பேருக்கு நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டில் 1.27 சதவீதம் என்ற அளவில் இருந்த நோய், தற்போது 2020-ம் ஆண்டில் 0.29 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
1,439 கர்ப்பிணிகள் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 1,135 பேருக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கூட்டு மருந்துகள் வழங்கப்பட்டு, தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவது தடுக்கப்பட்டு, தொற்றுள்ள குழந்தைகள் பிறப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story