ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கைசாலா’ செயலி மூலம் புயல் சேத கணக்கெடுப்பு - கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கைசாலா’ செயலி மூலம் புயல் சேதங்கள் கணக்கெடுக்கப்படுவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சேத விவரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட்டு இழப்பீடு உடனுக்குடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பயிர் சேதாரம் குறித்த விவரங்களை பொருத்தவரையில் தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ‘கைசாலா’ எனப்படும் செயலி மூலமாக ஜியோ டேக்கிங் புகைப்படங்களுடன் கூடிய கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு பணிகள் குறித்த கூட்டு ஆய்வினை மேற்கொள்ளவும் வருவாய்த் துறை மற்றும் வேளாண்துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கையாக 167 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 1,156 பேர் தங்க வைக்கப்பட்டனர். வீடுகள் சேதம், கால்நடை உயிரிழப்பு, பயிர் சேதாரம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 557 ஏரிகளில் 78 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 66 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. மொத்தமுள்ள 1,377 குளங்களில் 123 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 197 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன.
182 மின்கம்பங்களும், 11 மின்மாற்றி களும் சேதமடைந்தன.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story