பேரணாம்பட்டு அருகே, கால்வாய் உடைப்பை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுப்பு - கடப்பாரை, மண் வெட்டியுடன் 5 மணிநேரம் பொதுமக்கள் போராட்டம்


பேரணாம்பட்டு அருகே, கால்வாய் உடைப்பை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுப்பு - கடப்பாரை, மண் வெட்டியுடன் 5 மணிநேரம் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:30 PM GMT (Updated: 2 Dec 2020 3:15 PM GMT)

பேரணாம்பட்டு அருகே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க சென்றவர்களை, வனத்துறையினர் தடுத்ததால் கடப்பாரை, மண்வெட்டியுடன் பொதுமக்கள் வனப்பகுதியில் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள சிந்த கணவாய் கிராமத்தில் வனப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணைக்கும், கொல்லாபுரம், எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை ஆகிய 3 ஏரிகளுக்கும் பேரணாம்பட்டு வனசரகம் சாத்கர் அல்லேரிமலையிலிருந்து நீர் வருகிறது. வனத்துறை சார்பில் காடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் தடுப்பணையை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்ட போது போதிய நிதி இல்லாத காரணத்தினால் பணி பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கவுராப்பேட்டை ஜாப்ராபாத் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை ரூ.5 லட்சத்தில் பொதுமக்கள் சீரமைத்தனர். இந்த பகுதி வனத்துறை கட்டுப்பட்டில் உள்ளதால், சீமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் ‘நிவர்’ புயல் காரணமாக பெய்த மழையினால் இந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியாத்தம் பகுதியிலுள்ள எர்த்தாங்கல் ஏரி, நெல்லூர்பேட்டை ஏரி நோக்கி தண்ணீர் செல்வதால் சிந்த கணவாய், கவுராப்பேட்டை, கமலாபுரம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என 150-க்கு மேற்பட்டோர் நேற்று காலை சுமார் 11 மணியளவில் கடப்பாரை, மண்வெட்டி களுடன் கவுராப்பேட்டை ஜாப்ராபாத் ஏரிக்கு வரும் கால்வாயை தூர்வார சென்றனர்.

தகவலறிந்த பேரணாம்பட்டு வனசரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் ஹரி, மோகனவேல், தரணி உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று பொது மக்களை தடுத்து நிறுத்தி, வனத்துறையில் உரிய அனுமதி பெற வேண்டும் எனகூறினர். இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 5 மணி நேரம் வனப்பகுதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர்.

Next Story