டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேர் கைது - மாணவர் சங்கத்தினர் சாலைமறியல்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேர் கைது - மாணவர் சங்கத்தினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Dec 2020 10:00 PM IST (Updated: 2 Dec 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது தடியடி நடத்தியதையும் கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் குவிந்தனர். எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், சிங்காநல்லூர் நகர செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள், போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் திடீரென்று பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டக்காரர்கள் போலீஸ் பாதுகாப்பை தாண்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் தரையில் படுத்தும், தரையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

வேளாண்மை திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் அவர்களை வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய முயன்றனர். அதற்கு மாணவர் சங்கத்தினர் சாலையில் படுத்து உருண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் தூக்க முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story