பந்தை எடுக்க முயன்றபோது கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
கிரிக்கெட் விளையாடியபோது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்,
சென்னை வண்ணாரப்பேட்டை தங்கவேல் பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். இவருடைய மகன் தினேஷ் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினேஷ் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு திடலில் கிரிக்கெட் விளையாடினார்.
அப்போது அருகில் இருந்த கிணற்றுக்குள் பந்து விழுந்துவிட்டது. அந்த பந்தை எடுக்க முயன்ற தினேஷ், நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், தினேசை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த தினேசை மீட்க போராடினர். அப்போது அங்குவந்த அ.தி.மு.க. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், மாணவரை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து தினேசை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் கொடுத்தும் உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் ஆர்.எஸ்.ராஜேஷ் தனது காரில் மாணவரை ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர் தினேஷ் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story