முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சியின் பின்னணியில் பெரிய கதை - பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சியின் பின்னணியில் பெரிய கதை - பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2020 11:15 PM GMT (Updated: 2 Dec 2020 8:59 PM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சியின் பின்னணியில் பெரிய கதை உள்ளது என்று பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.

விஜயாப்புரா, 

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். குணம் அடைந்த அவர், தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும், தூக்க மாத்திரையை தெரியாமல் தின்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சியின் பின்னணியில் பெரிய கதை உள்ளது. எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். காலம் கூடி வரும்போது அனைத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறட்டும். அதன்பிறகு அனைத்தையும் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியில் 90 சதவீதம் பேர் கலப்பு சாதி-மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் சித்தராமையாவின் பங்கும் உள்ளது.

சித்தராமையா நல்ல தலைவர். ஆனால் அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கலப்பு மத (கிராஸ் பிரீட்) காங்கிரசில் சேர்ந்துள்ளார். அதனால் சித்தராமையா மீது சந்தேகம் எழுகிறது. பசுவதை தடை மற்றும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டங்களை இயற்ற வேண்டியது அவசியம். லவ் ஜிகாத்தை தடுக்க உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள சட்டங்களை விட பலமான சட்டத்தை இங்கு இயற்ற வேண்டும்.

மராட்டிய மேம்பாட்டு வாரியத்தை கண்டித்து வருகிற 5-ந் தேதி (நாளை மறுநாள்) முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். சட்டசபை மற்றும் மேல்-சபையில் அவர் எவ்வளவு ஓட்டுகளை பெற்றார் என்பதை கூற வேண்டும். மற்றொருவரை பற்றி ஒருமையில் பேசும் தகுதி அவருக்கு இல்லை. வாட்டாள் நாகராஜ் முன்பு சித்தராமையாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் கூறியுள்ளார்.

சூரர்கள், தீரர்கள் யாரோ அவர்களுக்கு தான் இத்தகைய மிரட்டல்கள் வரும். வாட்டாள் நாகராஜ் போன்ற ஆடுகளை யாரும் மிரட்ட மாட்டார்கள். அவர் மீண்டும் ஒரு முறை விஜயாப்புராவுக்கு வரட்டும் பார்க்கலாம். சுதந்திர போராட்ட தியாகி துரைசாமியின் நிலை என்ன ஆகியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவரை யாரும் போராட்டத்திற்கு அழைப்பது இல்லை. அவர் தற்போது ஜீரோ ஆகிவிட்டார். வட கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜை ஜீரோ ஆக்குவோம்.

மராட்டிய சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கர்நாடகத்தில் இருக்கின்றன. கர்நாடகத்தில் உள்ள உருது பள்ளிகளை கன்னட அமைப்பினர் மூடுவார்களா?. உருது தகவல் பலகைகளை கருப்பு மை கொண்டு அழிப்பார்களா?. உருது நமது தேசிய மொழி அல்ல. இந்தி, மராட்டிய மொழிகளை மட்டும் இவர்கள் அழிக்கிறார்கள்.

இந்தி தேசிய மொழி. கன்னடம் தாய்மொழி. நாங்கள் கன்னட மொழியிலேயே கையெழுத்து போடுகிறோம். அதனால் வாட்டாள் நாகராஜ் போன்றோரிடம் இருந்து நாங்கள் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை. கன்னட அமைப்பினரின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

Next Story