நெல்லை-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டியது; பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு
நெல்லை-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு நடத்துகிறார்.
இரட்டை ரெயில் பாதை
சென்னை-கன்னியாகுமரி இடையே தினமும் ஏராளமான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். நெல்லை வழியாக இயக்கப்படும் இந்த ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ரெயில்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். எனவே, சென்னை-கன்னியாகுமரி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கும் வகையில், இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு கட்டங்களாக இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இடையே ஒரு பகுதியாகவும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை மற்றொரு பகுதியாகவும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை வரையிலும், தூத்துக்குடி மார்க்கத்தில் சில கிலோ மீட்டர் தூரமும் இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டது.
இந்த புதிய இரட்டை ரெயில் பாதையில் பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 முறை ஆய்வு செய்தார். முதல் முறை தண்டவாள அமைப்புகளையும், 2-வது முறையாக மின்பாதையையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கங்கைகொண்டான்-நெல்லை
தொடர்ந்து அடுத்தகட்டமாக 85 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. அதன்படி திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையே 41 கிலோ மீட்டர் தூரமும், கடம்பூர்-கோவில்பட்டி இடையே 23 கிலோ மீட்டர் தூரமும், தட்டப்பாறை -தூத்துக்குடி மீளவிட்டான் இடையே 7 கிலோ மீட்டர் தூரமும் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. மேலும் கங்கைகொண்டானில் இருந்து நெல்லை வரை 14 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் ஏற்கனவே பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. தொடர்ந்து ரெயில் பாதையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, கான்கிரீட் சிலிப்பர் கட்டைகளை அமைத்து, அவற்றின் மீது தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்றது. கடந்த மாதம் முழுவதும் இந்த பணிகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டது. தாழையூத்து ரெயில் நிலைய வளாக பகுதியில் மட்டும் இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. மற்ற பகுதியில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் தண்டவாளம் அமைக்கப்பட்டு விட்டது. இத்துடன் கங்கைகொண்டான்-நெல்லை இடையிலான இரட்டை ரெயில் பாதை பணி முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாத (டிசம்பர்) இறுதியில் இரட்டை ரெயில் பாதையில் ஆய்வு நடத்த பெங்களூருவில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வர இருக்கிறார்.
இதனால் இந்த மாத இறுதிக்குள் பணிகளை நிறைவேற்றும் வகையில் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக ரெயில்வே கட்டுமான பிரிவு அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் இரவு, பகலாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கூடுதல் ரெயில்கள்
கங்கைகொண்டானில் இருந்து நெல்லை வரை இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. தாழையூத்து ரெயில் நிலைய பகுதியில் மட்டும் இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. புதிய தண்டவாளத்தின் மேல் பகுதியில் மின்சார பாதை அமைக்கும் பணியும் 80 சதவீதம் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட இணைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பணி முடிவடைந்தவுடன் பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர் இந்த பாதையில் ஆய்வு செய்து, ரெயில்களை இயக்க அனுமதி அளிப்பார்.
இதன்மூலம் நெல்லை- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை மூலம் தடையற்ற, விரைவான ரெயில் போக்குவரத்து நடைபெறும். இதனால் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதுடன், ரெயில் பயண நேரமும் மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story