‘புரெவி’ நெருங்கி வருவதால் மழை; தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் புயல் எச்சரிக்கை; தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை


பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் புயல் எச்சரிக்கை; நாட்டுப்படகை  டிராக்டர் மூலம் இழுத்துச்சென்ற காட்சி
x
பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் புயல் எச்சரிக்கை; நாட்டுப்படகை டிராக்டர் மூலம் இழுத்துச்சென்ற காட்சி
தினத்தந்தி 2 Dec 2020 11:35 PM GMT (Updated: 2 Dec 2020 11:35 PM GMT)

வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) இரவு முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்குள் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்க கூடும்.

புயல் எச்சரிக்கை கூண்டு
இதன் தாக்கம் இன்று படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், புயல் துறைமுகத்துக்கு வலது புறமாக கடக்கும் என்பதை குறிக்கும் வகையிலும் 6-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் கப்பல்கள் அனைத்தும் கயிறுகளால் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று தூத்துக்குடி கடலில் எந்தவித கொந்தளிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது. மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே காற்று வீசியது. புயல் நெருங்கி வருவதால் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு பிறகு லேசான மழை பெய்தது.

கடற்கரையில் படகுகள்
புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல், கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீன்வளத்துறை அதிகாரிகள் கடற்கரையோர மீனவ கிராமங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையோரமாக டிராக்டர் மூலம் இழுத்து நிறுத்தி வைத்தனர். திரேஸ்புரம் பகுதியில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையாமல் தடுக்கும் வகையில், படகுகள் இடைவெளி விட்டு நங்கூரமிட்டும், கயிறு கட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வ.உ.சி. துறைமுகம்
நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கப்பல் தளங்களில் 13 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. துறைமுகத்துக்கு வெளிப்பகுதியில் 3 கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. கப்பல் தளங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல்களில் இருந்து சரக்கு கையாளும் பணி நடந்து வந்தது.

அதே நேரத்தில் கப்பல் தளங்களில் இரும்பு தகடுகள், மரக்கட்டைகள் போன்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. கப்பல்களில் இருந்து கையாளும் சரக்குகளும் கப்பல் தளத்தில் வைப்பது தவிர்க்கப்பட்டது.

புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் கூறியதாவது:-

தண்டோரா மூலம் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்க வாய்ப்புள்ள 36 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த இடங்களில் அதிகாரிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாப்பாக மக்களை தங்க வைப்பதற்காக 93 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் குளங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குளங்களின் கரைகளை பலப்படுத்துவதற்காக 35 ஆயிரத்து 550 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர மின்சார வாரியத்திலும் 860 மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. காற்று காரணமாக மின்கம்பங்கள் சேதம் அடைந்தால் உடனடியாக மாற்றுவதற்கு வசதியாக 950 மின்கம்பங்கள், 41 டிரான்ஸ்பார்மர்கள் தயாராக உள்ளன. மின்சார வாரியம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் உள்ள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புயல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெல்லை தாமிரபரணியில் குளிக்க தடை
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி அளவில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதற்கிடையே, புயல் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால், நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் உள்ள மண்டபங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பேனர்களை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்புக்குழு
இந்த நிலையில் புயல் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று நேரில் வந்து முகாமிட்டு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த குழுவில் அரக்கோணத்தில் இருந்து வந்த கமாண்டர் கபில் வர்மா தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் பகுதியில் நின்று தாமிரபரணி ஆற்றை கண்காணித்து வருகிறார்கள். மேலும், இந்த குழுவினர் நெல்லை கொக்கிரகுளம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகர் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகுந்த இடங்கள் குறித்து மீட்பு படையினர் மாவட்ட வருவாய் துறையினர் உடன் சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மற்றொரு குழுவினர் சீவலப்பேரி மற்றும் அதன் அருகில் உள்ள ஆற்றங்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனர். மேலும், நெல்லை மாவட்டம் கடலோர பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால் கடலோர காவல்படைக்கு உரிய தகவல் மாநிலம் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

195 முகாம்கள் தயார்
நெல்லை மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 195 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அணைகள், குளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Next Story