சிவகாசி தொகுதியில் என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன்: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தொகுதி மக்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன் என அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதி பட தெரிவித்தார்.
படிப்படியாக உயர்வு
விருதுநகர் அருகே செந்நெல்குடியில் அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முதலில் கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், பின்னர் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து உள்ளனர்.
அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும் படிப்படியாக வந்தவர்கள் தான். தி.மு.க.வில் தான் உதயநிதி ஸ்டாலின் திடீரென சினிமா நடிகர் போல தாவிக்குதித்து மு.க. ஸ்டாலினின் தோளில் ஏறி அமர்ந்துள்ளார்.
தி.மு.க.வில் உள்ள பழம்பெரும் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் முன்பு கைகட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அவரது முடிவை அவர் தெரிவித்தார். அதில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
வெற்றி உறுதி
வருகிற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் என்னை எதிர்த்து முக்கிய நபரை வேட்பாளரை நிறுத்தப்போவதாக தெரிவிக்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மக்கள் தலைவர்களே யாரையாவது எதிர்த்து போட்டியிட்டு தான் வெற்றி பெற்றார்கள். தேர்தலில் எதிர்த்து போட்டியிட ஆள் இல்லாமல் வெற்றி பெறுவது அழகல்ல.
தனி ஆளாக சிலம்பு சுற்றுவதால் பலனில்லை. சிவகாசி தொகுதியில் என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தொகுதி மக்கள் ஆதரவுடன் நான் அமோக வெற்றி பெறுவது உறுதி. எனக்கு என் தொகுதி மக்கள் என்றும் ஆதரவளிப்பார்கள். நான் அவர்களுக்கு சேவை செய்வதையே எனது கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story