மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 8:10 AM IST (Updated: 3 Dec 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய மத்திய அரசின் செயலை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கட்சியினர் நேற்று திருவாரூர் பனகல் சாலையில் இருந்து கொட்டும் மழையில் நனைந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு புதிய ரெயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு ரெயில் நிலையம் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீசாருடன் தள்ளு, முள்ளு

போலீசாரின் தடுப்புகளை மீறி மனிதநேய மக்கள் கட்சியினர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதன் பின்னர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் பாதுஷா, மாநில விவசாய அணி மாநில பொருளாளர் இப்ராஹீம், மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நவாஸ், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் குத்புதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

150 பேர் கைது

இதில் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story