திருவலம் அருகே இரட்டை சகோதரர்கள் ஆற்றில் மூழ்கி பலி; தாய், தங்கை கண்முன் பரிதாபம்


பொன்னையாற்றில் தவறி விழுந்து இறந்த இரட்டை சகோதரர்கள் தனது தங்கை வரலட்சுமியுடன் எடுத்துக்கொண்ட பழைய படம்.
x
பொன்னையாற்றில் தவறி விழுந்து இறந்த இரட்டை சகோதரர்கள் தனது தங்கை வரலட்சுமியுடன் எடுத்துக்கொண்ட பழைய படம்.
தினத்தந்தி 3 Dec 2020 8:36 AM IST (Updated: 3 Dec 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே பொன்னையாற்றில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றபோது தவறி விழுந்து இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். தாய், தங்கையின் கண்முன் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேடிக்கை பார்க்க சென்றனர்
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள தேன்பள்ளி அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் விவசாயி. திருவலம் பொன்னை ஆற்றுப்பாலம் அருகே உள்ள சீக்கராஜபுரம் பல்லவர் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கோழிப் பண்ணையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு நவீன் (வயது 15), நரேஷ் (15) என்ற 2 மகன்களும், வரலட்சுமி என்ற மகளும் உண்டு.

நவீனும், நரேசும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் வீடு அருகே உள்ள பொன்னையாற்றில் வெள்ளம் செல்வதை பார்க்க லதா, தனது 2 மகன்கள் மற்றும் மகளை நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார்.

இரட்டை சகோதரர்கள் பலி
அங்கு தரைப்பாலம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது நவீன் தண்ணீரில் இறங்கி உள்ளான். எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆற்றுவெள்ளத்தில் விழுந்துள்ளான். வெள்ளம் அவனை இழுத்து சென்றுள்ளது. இதனால் பதறிய அவனது சகோதரன் நரேஷ், நவீனை காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளான். அவனையும் வெள்ளம் இழுத்து சென்றது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தாய் லதா, சகோதரி லட்சுமி ஆகியோர் கூச்சல் போட்டனர். உடனடியாக வெள்ளத்தை பார்க்க வந்திருந்த பொதுமக்கள், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நவீனையும், நரேசையும் மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருவலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து சகோதரர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்ட அவர்களது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் மற்றும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சகோதரர்கள் இருவரின் உடல்களையும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய், தங்கையின் கண்முன்பே சகோதரர்கள் இருவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவமும், இரட்டையர்களாக சேர்ந்து பிறந்து, சாவிலும் பிரியாமல் ஆற்றில் விழுந்து இறந்தது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story