மைசூருவில் இருந்து கல்வெட்டுகள், படிமங்களை தமிழகத்துக்கு மாற்றினால் பாதுகாக்க முடியுமா? தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 3 Dec 2020 8:47 AM IST (Updated: 3 Dec 2020 8:47 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் இருந்து கல்வெட்டுகள், படிமங்களை தமிழகத்திற்கு மாற்றினால் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த இளஞ்செழியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கல்வெட்டுகள்-படிமங்கள்
நம் நாட்டில் கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துகள் போன்றவை மத்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் அரபிக், பெர்சியன் கலாசார சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல சமஸ்கிருதம் மற்றும் திராவிட பாரம்பரிய சின்னங்கள், மைசூருவில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 6-ம் நூற்றாண்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், படிமங்கள் போன்றவை தற்போது மைசூருவில் வைக்கப்பட்டு உள்ளன. தமிழக பகுதியில் இருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த அரிய வகை பொருட்கள் ஏற்கனவே ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்தும் மைசூருவுக்கு மாற்றப்பட்டுள்ளன. நமது பழங்கால நாகரிகத்தை அறிய உதவும் இந்த அரிய வகைப்பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருப்பதால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை சென்னை, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தின் ஏதாவது ஒரு இடத்திற்கு கொண்டு வந்து பராமரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “பழமையான கல்வெட்டுகள் சாதாரண கற்களை போல வரலாற்று முக்கியத்துவம் அளிக்கப்படாமல் வைத்து உள்ளனர். கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் பாதுகாப்பு இன்றி கிடக்கின்றன. அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

தமிழகத்துக்கு மாற்றினால்...?
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “கல்வெட்டுகள், படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. படிமங்கள் லேமினேசன் செய்யப்பட்டுள்ளன. ஊட்டியில் மையம் அமைப்பதற்கு தட்பவெப்ப நிலை ஒத்துழைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், “மைசூரு மையத்தில் மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன, கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து எத்தனை படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன, இந்தியாவில் எத்தனை கல்வெட்டுகள் எந்தெந்த மொழியில் உள்ளன, எத்தனை கல்வெட்டு படிமங்கள் பாதுகாப்பாக உள்ளன, எத்தனை படிமங்கள் சேதமடைந்துள்ளன, அவற்றை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, படிமங்களை தமிழகத்திற்கு மாற்றும்பட்சத்தில் அவற்றை பாதுகாக்க முடியுமா, அதற்கான உரிய உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்துமா?” என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story