8 மாதங்களுக்கு பின்பு அரசு, தனியார் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் தொடங்கியது - மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை
8 மாதங்களுக்கு பின்பு அரசு, தனியார் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் தொடங்கியது. அப்போது, மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேலம்,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மற்ற செமஸ்டர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையையும் உயர் கல்வித்துறை அறிவித்தது.
அதன் பின்னரும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையாத காரணத்தினால் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டே கிடந்தன. இருப்பினும் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நவம்பர் 16-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அது அப்போது கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த அறிக்கையில், டிசம்பர் 2-ந் தேதி (நேற்று) முதல் முதுகலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் வின்சென்ட் பகுதியில் அரசு கலைக்கல்லூரி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 8 மாதங்களுக்கு பின்பு கல்லூரிகள் தொடங்கியதால் மாணவ- மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அதாவது, எம்.எஸ்.சி., எம்.ஏ., எம்.சி.ஏ., இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளும், எம்.பில்., பி.எச்டி ஆராய்ச்சி மாணவர்களும் தங்களது கல்லூரிகளுக்கு வந்தனர்.
கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளின் உடல் வெப்பத்தை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தபிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்து வகுப்பறைகளுக்கு செல்லுமாறு மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்ததால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.
இதுகுறித்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், “ஆன்லைனில் படிப்பதை விட நேரில் கல்லூரிகளுக்கு வந்து படிப்பது நன்றாக இருக்கும். அதனால் கல்லூரிக்கு வந்து படிப்பது ரொம்ப பிடித்து இருக்கிறது. நாங்கள் ரொம்ப சந்தோஷமாகத்தான் கல்லூரிக்கு வந்து இருக்கிறோம். எங்களுடைய மற்றொரு வீடாக கல்லூரியை பார்க்கிறோம்” என்றனர்.
வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க உள்ளதால், சில தனியார் கல்லூரிகள் மொத்தமாக அன்றைய தினத்தில் இருந்தே முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள், இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க இருப்பதாகவும் நேற்று கூறப்பட்டது.
Related Tags :
Next Story