சூளகிரி அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; தொழில் அதிபர் பலி - நண்பர்கள் 4 பேர் படுகாயம்
சூளகிரி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26). இவருக்கு ஈரோட்டில் சொந்தமாக சர்க்கரை ஆலை உள்ளது. தொழில் அதிபரான இவர் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கரும்பு தோட்டத்தை பார்வையிடுவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் ஈரோட்டில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் புறப்பட்டார். மேலும், காரை தினேஷ் ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பக்கமுள்ள கொல்லப்பள்ளி அருகே சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்த அவருடைய நண்பர்கள் கோவிந்தராஜ் (40) உதயகுமார் (26), பிரபு (40), யுவராஜ் (28) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த பிரபு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து சென்று இறந்த தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story