நாமக்கல் கோழிப்பண்ணைகளில் சத்தீஷ்கார் மாநில போலீசார் விசாரணை


நாமக்கல் கோழிப்பண்ணைகளில் சத்தீஷ்கார் மாநில போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2020 3:45 PM IST (Updated: 3 Dec 2020 3:51 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே உள்ள கோழிப்பண்ணைகளில் பணியாற்றி வந்த 35 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சத்தீஷ்கார் மாநில போலீசார் தற்போது நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள மோகனூர், லத்துவாடி, சிங்கிலிப்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள 3 கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்து வந்த சத்தீஷ்கார் மாநில தொழிலாளர்கள், தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காததால், தங்களை மீட்டு சொந்த மாநிலமான சத்தீஷ்காருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர் 3 கோழிப்பண்ணைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பண்ணைகளில் இருந்த 29 பெண்கள் உள்பட 35 தொழிலாளர்களை மீட்டதோடு, அவர்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை பண்ணையாளர்களிடம் இருந்து வசூல் செய்து, ஊதியத்துடன் சொந்த மாநிலத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் தங்களை கடத்தி சென்று கோழிப்பண்ணைகளில் ஊதியம் வழங்காமல், கொத்தடிமைகளாக நடத்தியதாக சத்தீஷ்கார் மாநில போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரின் பேரில் 3 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீதும், அவற்றின் மேலாளர்கள் மீதும் 4 பிரிவுகளின் கீழ் சத்தீஷ்கார் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தை சேர்ந்த 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் நேற்று ஒரு கோழிப்பண்ணையின் மேலாளரை கைது செய்ததாகவும், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story