உதவித்தொகையை அதிகரித்து வழங்கக்கோரி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - 130 பேர் கைது


உதவித்தொகையை அதிகரித்து வழங்கக்கோரி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - 130 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 4:15 PM IST (Updated: 3 Dec 2020 5:06 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உதவித்தொகையை அதிகரித்து வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அம்மாசி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கந்தன், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் ஹரி கிருஷ்ணன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்து உத்தரவாதப்படுத்தி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் சமாதானம் அடையாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கொண்டே இருந்தனர்.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 130 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் மறியல் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story