திண்டுக்கல், பழனி உள்பட 6 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் மறியல்


திண்டுக்கல், பழனி உள்பட 6 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2020 7:45 PM IST (Updated: 3 Dec 2020 7:38 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனி உள்பட 6 இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், அரசு துறைகளில் பின்னடைவு காலி பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாநிலம் முழுவதும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு நகர தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் செல்வநாயகம், புறநகர் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சாணார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாற்றுதிறனாளிகள் சங்க சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் சின்ராஜ், ஒன்றிய தலைவர் ராஜா உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வடமதுரை போலீசார், மறியலில் ஈடுபட்ட 286 பேரை கைது செய்தனர். கன்னிவாடி பஸ் நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டமும், அதன்பிறகு செம்பட்டி பஸ் நிலையம் அருகில் மறியலிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 270 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க நகர செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story