திண்டுக்கல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு 1,219 பேர் நியமனம்
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு 1,219 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்,
வங்க கடலில் ‘புரெவி’ புயல் உருவானதையொட்டி திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 84 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 82 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அவற்றில் உணவு, குடிநீர், பால் பவுடர், போர்வை, மருந்து பொருட்கள் மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மழை, வெள்ளத்தை கண்காணிப்பதற்கு 91 அரசு அலுவலர்கள் கொண்ட 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர்.
இதுதவிர புயல், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்வதற்கு 555 பேரும், மீட்பு பணிகளை முடுக்கி விடுவதற்கு 67 பேரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர பேரிடர் மீட்புபடையினர் 31 பேர், மீட்பு பணிக்கு உதவும் தன்னார்வலர்கள் 21 பேர், புயலால் சாலை மற்றும் குடியிருப்புகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 352 பேர், பாம்புகளை பிடிப்பதற்கு 18 பேர் என உள்பட மொத்தம் 1,219 பேர் பேரிடர் மீட்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மீட்பு பணிக்கு தேவையான கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. எனவே, புயல் மழையின் போது மீட்பு பணியை மேற்கொள்வதற்கு அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தி உள்ளார். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்துக்கு புயல் மழை கண்காணிப்பு அதிகாரியாக, முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த்மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கண்காணிப்பு அதிகாரி ரமேஷ்சந்த்மீனா நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தார். பின்னர் அவரும், கலெக்டர் விஜயலட்சுமியும் அகரம், ஆத்துப்பட்டி, மணலூர், புல்லாவெளி, அணைப்பட்டி, பேரணை, மாவூர் அணை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த், துணை கலெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல் கொடைக்கானலிலும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் சிவகுருபிரபாகரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story