கோத்தகிரி அருகே, மனைவியின் கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு - தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு


கோத்தகிரி அருகே, மனைவியின் கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு - தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2020 8:45 PM IST (Updated: 3 Dec 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோத்தகிரி,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(25). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் செல்வகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கும், அவருடைய மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையில் சந்தியாவுக்கும், செல்வகுமாரின் உறவினரான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி அம்பாள் காலனியை சேர்ந்த மாரிமுத்து(28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அதன்பின்னர் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து புதுக்கோட்டைக்கு சென்றார். தொடர்ந்து செல்வகுமார் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று, சந்தியா மற்றும் அவரது குழந்தையை தன்னுடன் கீழ்கோத்தகிரிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து கீழ்கோத்தகிரிக்கு செல்வகுமார் வந்தார். பின்னர் இரவு 10 மணியளவில் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென அவரது கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற செல்வகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story