தேவாலாவில் வீடுகளை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்
தேவாலாவில் வீடுகளை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா அரசு தேயிலை தோட்ட கழக(ரேஞ்ச் எண்-1) பகுதியில் கடந்த சில நாட்களாக 2 காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சத்துடன் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அதே காட்டுயானைகள் மேற்கண்ட பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டன. தொடர்ந்து ராமகிருஷ்ணன், ஜெயக்கொடி, ராஜேஸ்வரி, முருகையா, ராஜகுமாரி ஆகியோரது வீடுகளை இடித்து அட்டகாசம் செய்தன.
அப்போது வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பீதி அடைந்தனர். பின்னர் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறி அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
நீண்ட நேரம் அதே பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்த காட்டுயானைகள், காலை நேரத்தில் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அப்போது தங்களது வீடுகளை காட்டுயானைகள் இடித்து இருப்பதை கண்டு கவலை அடைந்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தேவாலா வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக அலுவலர்கள் நேரில் வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீடுகளை விரைவாக சீரமைத்து தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story