மேட்டுப்பாளையத்தில் தடுப்பு சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேருக்கு நினைவேந்தல் - பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்
மேட்டுப்பாளையத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த தினத்தையொட்டி நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடூர் ஏ.டி.காலனியில் துணிக்கடை அதிபர் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகளில் வசித்து வந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் தமிழகத்தை உலுக்கியதோடு மட்டுமல்லாமல் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் ஏற்பட்டு நேற்றோடு ஓராண்டு நிறைவுபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையத்தில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில், டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா ஆகியோர் கடந்த 2 தினங்களாக மேட்டுப்பாளையம் நகரில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனையை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கிருஷ்ணமூர்த்தி, ஆரோக்கியராஜ் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் ஏ.டி.காலனி, பஸ் நிலையம். கூட்டுறவு காலனி மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வணிக வளாகத்தில், சமூக நீதி கட்சியினர் சுவர் இடிந்து பலியான 17 பேரின் புகைப்படங்கள் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீசார் சமூக நீதிக்கட்சி மண்டல செயலாளர் நாகேந்திரன், பன்னீர்செல்வம் உள்பட 16 பேரை கைது செய்தனர். தொடர்ந்து வீரவணக்கம் செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராசுதொல்குடி மைந்தன் தலைமையில், குப்புராஜ் முன்னிலையில் கட்சியினர் தடையை மீறி ஊர்வலமாக வீரவணக்கம் நிகழ்ச்சி செலுத்த வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோவை திராவிடர் பண்பாட்டு கூட்டு இயக்கத்தினர் பலியான 17 பேருக்கு நீதி கேட்டும், மீண்டும் கட்டப்பட்ட தடுப்பு சுவரை இடிக்க கோரியும், ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார் தலைமையில் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள சிவரஞ்சனி தியேட்டர் அருகில் இருந்து நடூர் ஏ.டி. காலனிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊர்வமாக செல்ல முயன்றவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். உயிரிழந்த 17 பேருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 157 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தொடர் போராட்டங்கள் காரணமாக மேட்டுப்பாளையத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
முன்னதாக கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், ஏ.டி.காலனிக்கு சென்று தற்போது துணிகடை உரிமையாளர் புதிதாக கட்டியுள்ள தடுப்பு சுவரை பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணிகளை தாசில்தார்கள் சாந்தாமணி ரங்கராஜ் ஜெயசித்ரா ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story