கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்து உள்ளோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்து உள்ளோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2020 10:00 PM IST (Updated: 3 Dec 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்து உள்ளோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கோவை,

கோவை மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த மாவட்டத்துக்கு அ.தி.மு.க. அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளது.

குறிப்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.381 கோடியில் அதிநவீன சிகிச்சை உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் ஏழை-எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கொடுப்பதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக கோவை அரசு ஆஸ்பத்திரியின் தரம் உயர்ந்து உள்ளது.

இங்கு ரூ.8 கோடியில் கேத் லேப் என்ற நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதய அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகர பகுதியை நவீனப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி ரூ.39.47 கோடியில் உக்கடம் பெரியகுளம் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரை பலப்படுத்தப்பட்டு அங்கு பொதுமக்கள் நடந்து செல்ல பாதை வசதி, புல்வெளி அமைத்தல், இருக்கை வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதுபோன்று வாலாங்குளத்தை சீரமைத்து அதை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் குளத்துக்குள் சென்று அழகை ரசிக்கும் வகையில் மிதவை நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு செயற்கை நீரூற்றுகளும் இருப்பதால், பொதுமக்களை வெகுவாக கவரும். இதுதவிர செல்வசிந்தாமணி, முத்தண்ணன்குளம் உள்பட பல்வேறு குளங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

மேலும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன் பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதுதவிர கோவையின் இதயபகுதி என்று அழைக்கப்படும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் ஓய்வு எடுக்க இருக்கைவசதி உள்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

அதுபோன்று பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதற்காக ரூ.3.25 கோடியில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காந்திபூங்கா நவீனமயமாக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு பொதுமக்கள் வந்து பார்வையிட்டு ஓய்வு எடுக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர 1,209.93 கோடியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 896 வீடுகள் அமைக்கும் பணி, ரூ.41.67 கோடியில் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும்.

ரூ.172 கோடியில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், ரூ.414 கோடியில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை சாலை மேம்பாடு, தலா ரூ.8 கோடியில் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள கல்லூரிகளுக்கு 5 ஏக்கரில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மகளிர் கல்லூரியும் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story